First Posts
அர்ஷின் நிழல் நோக்கி… அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் பற்றிய நடைமுறை வாசிப்பு என்ற இந்த நூல் வெளியீட்டில் கலந்து, சிறப்பிக்க வருகை தந்துள்ள பெருந்தகைகளான உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் நித்தமும் நின்று நிலவட்டுமாக…!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ…
முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒரு பொன்மொழியைத் தேர்வு செய்து, அதனை ஒரு தனி நூலாக வெளிக் கொண்டுவந்துள்ளார், அஷ்ஷைக் எம்.ஐ.எம். அன்வர் ஸலபி.
இவர், ஸலபிய்யாவின் பட்டதாரிகளில் ஒருவர். அங்கு கற்கும் போதே வாசிப்பிலும் எழுத்துத்தாக்கத்திலும் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். உண்மை உதயம், எங்கள் தேசம், விடிவெள்ளி ஆகியவற்றில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்வாரி மாணவராக இவர் இணைந்திருந்த போது, சவூதி அரேபியா, மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்குப் புலமைப் பரிசில் பெற்றுச் சென்று, ஹதீஸ் துறையில் தனது இளங்கலைமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
லிசானுல் அரப் என்ற online அரபு மொழிக் கற்பித்தல் செயற்பாட்டின் மூலம் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களிடம் அரபு மொழிப் பரிட்சியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.
இஸ்லாமிய ஆய்வுக்கான இப்னு குதாமா நிறுவகத்தின் பணிப்பாளராகச் செயற்படும் இவர், பல சமூக சேவைச் செயற்பாடுகளையும் மேற் கொண்டுள்ளார். அவ்வப்போது சமூகம் எதிர்கொள்ளும் அரசியல், ஆன்மிகப் பிரச்சினைகள் தொடர்பாக ஜூம்ஆ சொற்பொழிவுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.
இஸ்லாமியப் பிரசாரப் பணியில் ஆர்வமும் ஈடுபாடும் உடைய இவரின் கன்னி முயற்சியாக இந்த நூல் வெளிவருகிறது.
இது, அறிவு சார்ந்த ஆன்மிக வாழ்வியல் ஒழுங்கையும்; ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் இகபர இன்பங்கள் பற்றியும் வலியுறுத்திப் பேசுகிறது.
மனித வாழ்வு ஒழுக்க விழுமியத்தால் மேம்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன் – அல் ஹதீஸ் நிழலில் தலைப்புகளுக்கு ஏற்ற ஆதரவான சில அறிஞர்கள் கருத்துக்களையும் ஒன்றிணைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் சமகாலப் பிரச்சினைகளான
* முஸ்லிம் சமூகத்தில் நிலவும் தலைமைத்துவ வெற்றிடம்.
* போதைப் பொருள் பாவனை,
* பாலியல் துஷ்பிரயோகம்,
* தற்கொலை முயற்சி,
* மன அழுத்தம்,
* வறுமைப் பிரச்சினை
* ஆன்மிக வறுமை எனப் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தற்கால மொழி நடையில் எளிய தமிழில, ஒரு சாதாரண வாசகனும் புரியும் வகையில் நூலாசிரியர் விடயங்களைப் பேசுகின்றார்.
* ஒரு மவ்லவித்துமான எழுத்து நடையிலிருந்து இந்த நூல் முற்றிலும் வேறுபட்டுச் செல்கிறது.
* இதன் மொழி நடை வரவேற்றத் தக்கதாக உள்ளது.
* நூலில் விடயங்களை முன்வைக்கும் நடைப் பாங்கு முன்னேற்றகரமானதாகக் காணப்படுகிறது.
* ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளே காணப்படுகின்றன.
* நிறுத்தக்குறிகள் பெருமளவு சரியாக உள்ளன. சிற்சில இடங்களைத் தவிர.
* எழுத்துப் பிழைகள் வராமல், சரவை பார்ப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
* இலக்கண ஒழுங்குகள் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளன.
* பல்வேறு இயக்கச் சிந்தனை முகாம்களின் எழுத்துக்களை வாசித்துள்ளார். அதன் தாக்கம் நூலில் வெளிப்படுகிறது. முன்னுரையில் அது பற்றிப் பேசியுள்ளார்.
* நூலாசிரியரின் மொழி நடை பழைமைத்துவ சிந்தனை மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சுவாரஸ்ய வாசிப்பார்வத்தை ஏற்படுத்துமாப் போல் உள்ளது. இவ்வாறு மொழி நடை காணப்படும் போது ரசித்து வாசிப்பார்கள்.
* இதை மற்றவர்களும் பயன்படுத்ததலாம் என்பது எனது கருத்து.
* எழுத்தர் பின்பற்ற வேண்டிய சில நெறி முறைகள் உள்ளன. அந்த நெறி முறைகளைப் பின்பற்றினால், எழுத்துச் சீராகவும் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கு தெளிவாகவும் இருக்கும்.